திருவாரூரில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் . முன்னிலை வகித்தார். ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 175 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் 25 பேருக்கும், ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 367 மதிப்பிலான காதுகேளாத, வாய் பேசாத முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் 33 பேருக்கும் என மொத்தம் 58 பேருக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 542 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.