வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு அறிவிப்பு
திருச்சி, நவ 20: ஓசூர் நீதிமன்ற வளாகத்தின் அருகில், வழக்கறிஞர் கண்ணன் அவர்கள் வழக்கறிஞர் சீருடையில் இருக்கும் பொழுதே ஒரு சமூக விரோதியால் வெட்ட படுவதை ஊடகங்களில் பார்க்கும் பொழுது பார்க்கும் அனைவரது மனமும் பதைபதைக்கிறது. இந்தக் கொடூர குற்ற செயலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்வது தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு முறை படுகொலை செய்யப்படும் பொழுதும், நாம் நமது கண்டனங்களை தெரிவிப்பதோடு, தமிழக அரசினையும் மத்திய அரசையும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி போராட்டங்கள் செய்து வருகிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்த தமிழக சட்ட அமைச்சர் அவர்களை சந்தித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான ஆர். எஸ் .பாரதி அவர்கள் சட்டம் ஏற்றுவதை பற்றி உடனடியாக முடிவு எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்கள். உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசும், மத்திய அரசும் இயற்றிட வலியுறுத்தி நாளையும், நாளை மறுதினமும், அதாவது 21 .11 .2024 மற்றும் 22. 11 .2024 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வேண்டிக் கொள்கின்றது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்துவது பொறுத்து விரைவில் பொதுக்குழு கூடி போராட்ட வடிவத்தை தீர்மானிக்கப்படும் என்று நந்தகுமார் சேர்மன். பன்னீர்செல்வன் பொதுச் செயலாளர் ரவி பொருளாளர் Jaac ஆகியோர் கூறினர்.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் இச்சம்பவம் பற்றி கூறுகையில் தொடர்ந்து தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது மேலும் திருச்சியில் இச்சம்பவம் போல் வழக்கறிஞர் மாடக்குடி சேகர், வழக்கறிஞர் கோபி கண்ணன், வழக்கறிஞர் உறையூர் மதியழகன் ஆகியோர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது. என்று P. V வெங்கட் செயலாளர், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சி. சார்பில் தெரிவித்துள்ளனர்