திருவையாறு.
திருவையாறு அடுத்த நடுக்காவேரி மெயின்ரோட்டை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜீவ்காந்தி(33) இவர் அள்ளுர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. நிவேதா(28) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. நேற்று காலையில் குளித்துவிட்டு வருகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு தென்பெரம்பூர் வெண்ணாற்றில் ராஜீவ்காந்தியும் அவரது தம்பி விவேக்கும் குளிக்க சென்றனர். வெண்ணாற்றங்கரை சென்றவுடன் தம்பி விவேக்யை நீ இங்கேயே உள்ள சத்திரத்தில் உட்கார்ந்திரு நான் காலை கடன் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ராஜீவ்காந்தி சென்றுள்ளார். சென்ற அண்ணணை காணவில்லை என்று தேடிசென்று பார்க்கும்போது வெண்ணாற்றின் வடகரையில் உள்ள தேக்கு மரத்தில் ராஜீவ்காந்தி தான் கையில் எடுத்து சென்ற துண்டில் தூக்கு மாட்டி தொங்கிகொண்டிருந்தார்.
உடனே கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி தாசில்தார் நெடுஞ்செழியனுக்கும், நடுக்காவேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடம் சென்று தூக்கில் தொங்கிகொண்டிருந்த ராஜீவ்காந்தியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக ராஜீவ்காந்தி மனைவி நிவேதா கொடுத்த புகாரில் எனது கணவர் ராஜீவ்காந்தியும் அவரது தம்பி விவேக்கும் தென்பெரம்பூர் வெண்ணாற்றில் குளிக்க செல்வதாக சொல்லிவிட்டு காலையில் சென்றார்கள். எனக்கு காலை 9 மணிக்கு விவேக் தகவல் கொடுத்தார். சென்று பார்த்தபோது எனது கணவர் ராஜீவ்காந்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார் என்று புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ்காந்தி உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து ராஜீவ்காந்தி எப்படி இறந்தார், என்ன காரணம் என்று பல கோணங்களில் நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.