புதிய கற்கால கைக்கோடரி
திருச்சி.செப்.28: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் செயலர் குணசேகரன் பொருளாளர் அப்துல் அஜீஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
கண்காட்சியினை பார்வையிட வருகை தந்த பள்ளி மாணவர்களிடம் சந்திரசேகரன் புதிய கற்கால கோடரி குறித்து பேசுகையில்,
புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரி கல்லால் ஆனது.
ஒரு புறம் வெட்டுவதற்காகவும் தோண்டுவதற்கும் வசதியாகக் கூர்மையாகவும், மறுபுறம் கைப்பிடி அமைப்பதற்காகத் தட்டையாகவும் கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். மனித குலத்தின் தொன்மை வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி அலைந்து நிலையான இருப்பிடம் இன்றி வாழ்ந்தான். புதிய கற்காலத்தில் மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றான். இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான்.புதிய கற்கால கருவிகள் மனிதன் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளைத் தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன என்றார்.
