அஷ்டாங்க யோகம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சி, செப் 29: திருச்சி எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமினை சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் வழக்குரைஞர் ரகுநாதன் துவங்கி வைத்தார்.பாரதியார் குருகுல நிர்வாகி முருகானந்தம் முன்னிலை வகித்தார். எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.முகாமில் அஷ்டாங்க யோகம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள் உள்ளன. கொல்லாமை, உண்மை, திருடாமை, பிரம்மச்சரியம்,இரவாமை இவை ஐந்தும் இயமங்கள் ஆகும். தூய்மை, மகிழ்ச்சி, தவம், சாஸ்திரப்படிப்பு ஆகியவை நியமங்கள் ஆகும். உடலையும், உள்ளத்தையும் உறுதியாகவும் சுகமாக வைக்கும் நிலை ஆசனம் ஆகும்.சுவாச இயக்கத்தை சீரான கால அளவோடு இயங்கச் செய்வது பிராணாயாமம் ஆகும். மன கிலேசங்களையும், கிளர்ச்சிகளையும் தவிர்த்து இருக்கும் நிலை பிரத்யாகாரம் ஆகும். மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலை தாரணையாகும். தாரணையின் தொடர் நிலையே தியானம் ஆகும் மனம் ஒருநிலைப்பட்டு உயிரின் நிலை பற்றி புரிதலே சமாதியாகும் என்றார். எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஸ்ரீதர், மாணிக்கம் உள்ளிட்ட முகாம் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல், அடிப்படை மின் பொறியியல் மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.