அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 11-ம் நாள் காலை சரியாக 11.00 மணிக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ, மாணவியர்களை கொண்டு எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி, ஆகஸ்ட், 7: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆகஸ்ட்-11 ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் வருகின்ற ஆகஸ்ட் 11-ம் நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 11-ம் நாள் காலை சரியாக 11.00 மணிக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ, மாணவியர்களை கொண்டு எடுக்க வேண்டும். அது தொடர்பான புகைப்படங்களை அறிவுறுத்தியவாறு படிவத்தில் பதிவு செய்து உடனடியாக அனுப்பிட வேண்டும்.
மேலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு தொடர் ஜோதி ஓட்டம் மற்றும் சைக்கிள் பேரணி ஆகியவற்றையும் காவலர்கள் பங்குபெறும் மோட்டார் சைக்கிள் பேரணியையும் நடத்திட வேண்டும். அரிஸ்டோ மேம்பாலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் ஓவியம் வரைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் இந்த மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தி வெற்றியடைய அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.