பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை கண்டித்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்பினர் கைது.
திருச்சி செப் 28: இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சில நாட்களாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பு மற்றும் அதனுடைய இணைந்த செயல்படும் அமைப்பும் அனைத்தும் ஐந்து வருடம் தடை செய்து மத்திய அரசு உத்திரவிட்டது.
மத்திய அரசை கண்டித்து இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த நிலையில் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை 5மணி அளவில் திடீரென இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் தேசிய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கொன்னடி ஆகியோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்று, அங்கு வந்த மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார்.
தங்கள் கைது செய்யப்பட்டாலும் பரவாயில்லை என கூறி மத்திய அரசை கண்டித்தும், மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவை கலைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 100கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.