ரயில் சேவையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்க வேண்டும்

 

தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் மனிதவிடியல் பி மோகன்,திருச்சியில் ரயில் சேவை இயக்கத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்க கோரிக்கை 


திருச்சி, மார்ச், 9:                                    திருச்சி இரயில்வே கோட்டத்தின் கீழ் திருச்சி, தஞ்சாவூர் நாகப்பட்டினம், கடலூர்,வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 

சென்னைக்கு அடுத்த பெரிய இரயில் நிலையம் திருச்சியில் இருந்தாலும் திருச்சி மக்களின் கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காமல் உள்ளது.


திருச்சி புதுக்கோட்டை வழித்தடத்தில் அகல பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மீண்டும் திறக்கப்படும் என்ற உறுதி மொழியுடன் 1995ஆம் ஆண்டு உடையான் பட்டி இரயில் நிலையம் மூடப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்போது வரை இந்த இரயில் நிலையம் திறக்கப்படவில்லை. இப்பகுதி திருச்சி மாநகரில் இருந்தாலும் இரயில்வே நிர்வாக ரீதியில் மதுரை கோட்டத்தின் கீழ் வருகிறது. எனவே உடையான் பட்டி இரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்

 திருச்சி புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகம், சிப்காட் தொழிற்பேட்டை, பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு வந்து செல்வோர் பயன்பெறும் வகையில் திருச்சி காரைக்குடி இரயில் தளத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு எதிரே புதிய இரயில் நிலையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் மண்டையூர், சூரியூர், தொண்டைமான் நல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களும் பயன்பெறுவர்


திருச்சியில் இருந்து பெங்களூருக்கு நாள்தோறும் கல்வி, மருத்துவம் தொழில் நிமித்தமாக ஏராளமானோர் சென்று வருவதால் அவர்களின் வசதிக்காக திருச்சி பெங்களூர் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும். அதேபோல் திருச்சி கோட்டத்தில் உள்ள விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு இரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு இரயிலையாவது நீட்டிப்பு செய்து திருச்சியில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து மும்பைக்கு வாராந்திர இரயில் சேவை தொடங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக திருச்சி பழனி இடையே இரயில் சேவை தொடங்க வேண்டும்

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால் திருச்சி மக்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. எனவே நீட்டிக்கப்பட்ட அந்த இரயிலுக்கு பதிலாக திருச்சி சென்னை இடையே புதிய இரயில் சேவை தொடங்க வேண்டும். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலின் தற்போதைய பயண நேரம் மக்களுக்கு அவதி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை சென்னை திருச்சி ஆகிய இருமுனைகளிலும் இரவு 11 மணிக்கு புறப்பட்ட அதிகாலை ஐந்து மணிக்கு செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இந்த இரயில் முன்பு இருந்தது போல பொன்மலை கள்ளக்குடி பெண்ணாடத்தில் நின்று செல்ல வேண்டும் முன்பு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள திருச்சி லால்குடி பயணிகள் இரயிலை மீண்டும் கொண்டுவந்து அதை திருச்சியில் இருந்து அரியலூர் வரை இயக்க வேண்டும்.

திருச்சி இரயில்வே கோட்டம் புதுச்சேரி வேலூர் என நீண்ட தொலைவைக் கொண்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் இரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல் வழித்தடத்தில் அரை கிலோ மீட்டர் தொலைவைக் கடந்தால் மதுரை கோட்டமும், கரூர் வழித்தடத்தில் மாரிஸ் மேம்பாலத்தை கடந்தால் சேலம் கோட்டமும் தொடங்கி விடுகின்றன. திருவாரூர் காரைக்குடி வழித்தடம் திருச்சி கோட்டத்தில் உள்ள நிலையில், திருச்சி காரைக்குடி வழித்தடம் மதுரை கோட்டத்தில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கவும் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடு கட்ட தடை இல்லா சான்றிதழ் பெறவும் மதுரை சேலத்துக்கு மக்கள் செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்க திருச்சி திண்டுக்கல், திருச்சி காரைக்குடி, திருச்சி கரூர் ஆகிய வழித்தடங்களை திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

திருச்சியிலிருந்து சமயபுரம் பாடாலூர் பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கும் திருச்சியில் இருந்து துறையூர் தம்மம்பட்டி வழியாக வாழப்பாடிக்கும் புதிய இரயில் வழித்தடங்கள் உருவாக்க வேண்டும்


திருச்சி கரூர் இரயில் வழித்தடத்தை இரட்டை வழிதடமாக மாற்ற வேண்டும். பொன்மலை வளாகத்தில் எலக்ட்ரிக் லோகோ பணிமனை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகம் அமைக்க திருச்சி புதுக்கோட்டை சாலையையொட்டி சூரியூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருவதற்கான பூர்வகப் பணிகள் துவங்கின. மத்திய பல்கலையின் திருச்சி வளாகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் கேட்டிருந்த நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் 6 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஒதுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருச்சியில் அமைந்தால் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் பயன் கிடைக்கும் எனவே உரிய கவனம் செலுத்தி மத்திய பல்கலைக்கழக திருச்சி வளாகம் அமைய தேவையான  நிலத்தை ஒதுக்கீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

Post a Comment

Previous Post Next Post

Contact Form