செப்டம்பர் 10 அன்று சென்னையில் நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 5 இலட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மன்றம் நா.சண்முகநாதன் தகவல்
திருச்சி,ஆக.30: செப்டம்பர் 10 அன்று சென்னையில் நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 5 இலட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு எடுத்துள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மன்றம் நா.சண்முகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கருமண்டபம் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி தலைமை தாங்கினார்.திருச்சி மாவட்டச் செயலாளர் பெ.பொன்னுச்சாமி வரவேற்றுப் பேசினார்.மாநிலப் பொருளாளர் முருக செல்வராசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளருமாகிய மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண ஆசிரியருக்கு வழங்கிடல் வேண்டும்.புதியபங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும்.பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்கிடல் வேண்டும்.தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு விரைந்து வழங்கிடல் வேண்டும்.
ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 1.7.22 முதல் 3 சதவீத அகவிலைப்படி வழங்கி இருப்பதை மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.
1.6.2006 அன்று பணிவரன்முறை செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் கால முறை ஊதியம் வழங்கிடல் வேண்டும்.தொடக்கக் கல்வித்துறையினை சீரழிக்கும் அரசாணை எண் 101 மற்றும் 108 ஆகியவற்றை இரத்து செய்திடல் வேண்டும்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் செப்டம்பர் 10 அன்று பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாநிலம் முழுவதும் 5 இலட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்களை பங்கேற்கச் செய்வது என மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 25ஆயிரம் ஆசிரியர்களை பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் விஜயக்குமார்,மாநிலச் செயலாளர்கள் ந.கிட்டு,செ.இராஜேந்திரன்,மாநில கொள்கை விளக்கச் செயலாளர் மா.பாலகிருஷ்ண்ன்,மாநில சட்டப்பிரிவு உறுப்பினர் சுப்பிரமணியன்,மாநில அமைப்புச் செயலாளர் கோ.சிவக்குமார்,தலைமை நிலையச் செயலாளர்கள் சு.இரமேசு,ப.அறிவுடைநம்பி,வெளியீட்டுச் செயலாளர் மூ.பெரியசாமி,மாநில மகளிரணி அமைப்பாளர் ரெ.மதனா,மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கா.தர்மராசு ,இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.இராமச்சந்திரன் மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள்,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தலைமை நிலையச் செயலாளர் சு.இரமேசு நன்றி கூறினார்.